Published : 09 Jun 2023 06:17 AM
Last Updated : 09 Jun 2023 06:17 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகோட்டை மகளிர் போலீஸில் இவர் மீது புகார் செய்யப்பட்டது.
இதில் நாச்சியப்பன் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க சிலர் கட்டப்பஞ்சாயத்துப் பேசி ரூ.50 லட்சம் வரை வாங்கினர். மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இருப்பினும் இவர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் 2022 ஜன.25-ம் தேதி புதுக்கோட்டை பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், சிறுமியின் பாலியல் தொல்லை தொடர்பான புகாரை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிறுமியின் தாயார் மனுத் தாக்கல் செய்தார். நாச்சியப்பனின் மனைவி சகுந்தலாதேவியும் தனது கணவரிடம் இருந்து பணத்தைப் பறித்து தற்கொலைக்கு தூண்டியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
2 மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி விசாரணையில் நாச்சியப்பனை மிரட்டி பணம் பெற்றது தெரியவந்தது.
மிரட்டி பணம் வாங்கிய சம்பவத்தில் கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் குணாளன், ஆலங்குடியைச் சேர்ந்த சாத்தையா, கல்லலைச் சேர்ந்த சரவணன், தேவகோட்டையைச் சேர்ந்த பாலாஜி, அமராவதிபுதூரைச் சேர்ந்த வேலுகிருஷ்ணன், மேலமங்கலத்தைச் சேர்ந்த ஆதிமூலம், வெற்றியூரைச் சேர்ந்த சங்கு உதயகுமார், தேவகோட்டை டிஎஸ்பியாக இருந்த ரமேஷ், மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா, நல்லாங்குளத்தைச் சேர்ந்த கலை, கீழப்பூங்குடியைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகிய 11 பேர் மீது இந்த தண்டனைச் சட்டம் 211, 384, 389, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் குணாளன், பாலாஜி, தேவேந்திரன் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். நாச்சியப்பனை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கிலும் இதேபோல் 11 பேர் மீது புதுக்கோட்டை மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT