

தருமபுரி: தருமபுரி நகராட்சி கவுன்சிலராக இருப்பவர் (திமுக) புவனேஸ்வரன். இவரது மகள் ஹர்ஷா (23). ஓசூரில் உள்ள தனியார் பார்மஸி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதியமான்கோட்டை அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் பாறைகளுக்கு இடையே சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குடும்ப நண்பரான 17 வயது சிறுவன் ஹர்ஷாவை காதலித்துள்ளார். வயது வித்தியாசம் உள்ளிட்ட காரணங்களை கூறி ஹர்ஷா காதலை மறுத்துள்ளார்.
இதற்கிடையில் ஹர்ஷாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் மேற்கொண்டதால் கோபத்தில் இருந்த சிறுவன் இதுதொடர்பாக பேச வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிறுவன் ஹர்ஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், சிறுவனை கைது செய்து சேலம் மாவட்ட கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.