Published : 09 Jun 2023 04:05 AM
Last Updated : 09 Jun 2023 04:05 AM

குன்னத்தூரில் தாய், மகளை கடத்தி நகை பறிப்பு: 48 மணி நேரத்தில் 7 பேரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

திருப்பூர்: குன்னத்தூரில் தாய், மகளை கடத்தி நகைகளை பறித்து சென்ற 7 பேரை 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாரை நேரில் சந்தித்து, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி, ராமேஸ்வரி (எ) தேவி (42). இவர்கள்கடந்த 4-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீன் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, அவரது மகள் ரஞ்சிதா, தங்கை மகன் முத்துக்குமார் ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

பாளையம் சுடுகாடு அருகே சென்றபோது, அங்கு பதிவெண் மறைக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளை நிற கார் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். திடீரெனகாட்டுக்குள் இருந்து கையில் கத்தி, அரிவாளுடன் வந்த சிலர் இருசக்கரவாகனத்தை தள்ளிவிட்டனர். ராமேஸ்வரி, அவரது மகள் ரஞ்சிதாவை காரில் கடத்தினர். இருவரிடமும் இருந்து 13.5 பவுன் தங்க நகைகளை பறித்துவிட்டு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே இறக்கிவிட்டு தப்பினர்.

இது தொடர்பாக ராமேஸ்வரி கடந்த 4-ம் தேதி குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சாமி நாதன் உத்தரவின்படி, குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பிகாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட கார் கோவை மாவட்டம் கிணத்துக் கடவை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

கிணத்துக் கடவு ஏழுர் வடபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (48), திருப்பூர் நல்லூரை சேர்ந்த இசக்கி பாண்டி (32) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இது தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த அருண் பாண்டியன் (23), ஈரோடு வீரம்பாளையத்தை சேர்ந்த சேகர் (29), சிவகங்கை மாவட்டம் புலவன்வாயிலை சேர்ந்த அருள் செல்வம் (31), ஊத்துக்குளி பள்ளகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பிரபு (29), திருப்பூர் கொங்கு பிரதான சாலை ரங்கநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் (30) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இவர்கள், திருப்பூரில் உள்ளநிறுவனங்களில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் இசக்கிபாண்டி, அருண்பாண்டியன் மீது வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து 10 பவுன் 2 கிராம் தங்க நகைகள், ரூ.4300 ரொக்கம், 2 அலைபேசிகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 7 பேரும் கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

தாய், மகளை கடத்தி கத்தி முனையில் தங்க நகைகளை பறித்த வழக்கில், குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் விரைந்து கைது செய்த தனிப் படையினரை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சாமி நாதன் ஆகியோர் பாராட்டி வெகுமதி வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x