

தருமபுரி / அரூர்: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி வரை மோசடி செய்த புகாரில் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன்கள் ஜெகன் (39), அருண் ராஜா (37). இருவரும் சிட் ஃபண்ட் நிறுவனம் ( பர்ஃபெக்ட் விஷன் பிரைவேட் லிமிடெட்) நடத்தி வருகின்றனர். இதன் தலைமை அலுவலகம் தருமபுரி - பென்னாகரம் சாலையும், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையும் குறுக்கிடும் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் உள்ளது.
அதேபோல, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு ரூ.1,800 வீதம் 100 நாட்கள் ஊக்கத் தொகை வழங்கப்படும். 100-வது நாளுக்குப் பின் முதலீடு செய்த தொகையும் திருப்பி வழங்கப்படும் என்பது போன்ற கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர்.
அந்த வகையில் இந்நிறுவனத்தில் இதுவரை சுமார் 1,000 பேர் வரை முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு சில நாட்கள் வரை மட்டுமே ஊக்கத் தொகை வழங்கியுள்ளனர். முதலீட்டுத் தொகையையும் தராமல் அலைக்கழித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர், இந்நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளார்.
பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ.8 லட்சத்தை மட்டும் வழங்கிய சிட் ஃபண்ட் நிறுவனம் ரூ.12 லட்சத்தை தர மறுத்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பலர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார் வழிகாட்டுதலின்பேரில் தருமபுரி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீஸார் நேற்று, பூனையானூரில் உள்ள இந்நிறுவன உரிமையாளர்களின் வீடு மற்றும் தருமபுரியில் உள்ள தலைமை அலுவலகம், ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி என 4 இடங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை போலீஸார் கைப் பற்றியுள்ளனர்.
இதனிடையே மோசடி, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெகன், அருண் ராஜா ஆகியோரை கைது செய்தனர். பின்னர், இருவரையும் கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ( 9-ம் தேதி ) ஆஜர்படுத்த உள்ளனர். முதலீட்டாளர்களுக்கு சில நாட்கள் வரை மட்டுமே ஊக்கத்தொகை வழங்கியுள்ளனர். முதலீட்டுத் தொகையையும் தராமல் அலைக்கழித்துள்ளனர்.