வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்ப முயன்றவர் கொலை: மையத்துக்கு சீல் வைப்பு

வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்ப முயன்றவர் கொலை: மையத்துக்கு சீல் வைப்பு
Updated on
1 min read

நாகப்பட்டினம்: வேதாரண்யம் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்ப முயன்றவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக, மையத்தின் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கரையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் முருகேசன்(47). மதுபோதைக்கு அடிமையான இவரை மதுபோதையிலிருந்து மீட்பதற்காக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பிரியம் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இந்த மையத்தில் 30 பேர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் முருகேசன், சரண் ராஜ்(32), பிரபாகரன்(36), பால முருகன்(24) ஆகிய 4 பேர் நேற்று மையத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து தப்பிச் செல்ல முயன்றனர். அதைப் பார்த்த மையத்தின் உரிமையாளர் மணி கண்டன்(37), மேலாளர் வேல் முருகன்(38), ஊழியர்கள் ஷ்யாம் சுந்தர் (30), தீபக் குமார் (33) ஆகியோர், தப்பிச் செல்ல முயன்ற 4 பேரையும் பிடித்து தூணில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த 4 பேரையும் மையத்தின் ஊழியர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முருகேசனை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், கோட்டாட்சியர் மதியழகன், வட்டாட்சியர் ஜெயசீலன், டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் மையத்தில் இருந்த மற்ற 26 பேரையும் மீட்டு, அவர்களில் 17 பேரை வேதாரண்யத்தில் உள்ள பல்நோக்கு சேவை மையத்தில் தங்க வைத்தனர்.

மீதியுள்ள 9 பேரை நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மையத்தின் உரிமையாளர் மணி கண்டன், மேலாளர் வேல் முருகன், ஊழியர்கள் ஷ்யாம் சுந்தர், தீபக் குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும், பிரியம் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் குறித்து கோட்டாட்சியர் ஆய்வு செய்தபோது, அந்த மையத்தை நடத்துவதற்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மட்டுமே அனுமதி பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரியம் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்துக்கு கோட்டாட்சியர் மதியழகன் நேற்று இரவு சீல் வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in