

தருமபுரி: தருமபுரியில் திமுக கவுன்சிலரின் மகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
தருமபுரி நகராட்சி கவுன்சிலராக இருப்பவர் திமுக-வைச் சேர்ந்த புவனேஸ்வரன். இவர் தருமபுரியில் பழைய ரயில்வே லைன் பகுதியில் உள்ள கோல்டன் தெருவில் வசிக்கிறார். இவரது மகள் ஹர்ஷா(23) பி.பார்ம்., முடித்து விட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பார்மஸி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று(7-ம் தேதி) காலை தருமபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்த நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் பாறைகளுக்கு மத்தியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்பேரில் அதியமான்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், சடலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். போலீஸாரின் விசாரணையில், உயிரிழந்து கிடந்தது கவுன்சிலர் புவனேஸ்வரனின் மகள் ஹர்ஷா என தெரியவந்தது.
இவர் கொலைக்கான காரணம், கொலையில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கொலையான ஹர்ஷாவின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் தருமபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.