யூடியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உட்பட மூவர் கைது

யூடியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உட்பட மூவர் கைது
Updated on
1 min read

கோவை: கோவையில் யூ டியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தம்பதி உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள அக்கம்மாள் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹேமலதா(38). இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் யூ டியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தங்களிடம் ரூ.1,200 முதலீடு செய்தால் 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ.300 சேர்த்து திருப்பி தரப்படும் என தம்பதி அறிவித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், கூறியபடி யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை இழந்த பன்னிமடை பிரிவு, பாரதி நகரைச் சேர்ந்த ரமா (30) என்பவர் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸார் விசாரித்த போது தம்பதி 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் தொகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், ஹேமலதா, அவர்களுக்கு உதவிய அருணாச்சலம் (33) ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 45 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், டிஜிட்டல் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in