

கோவில்பட்டி: அதிகாலையில் தனியாக நடைபயிற்சி செல்லும் முதியவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று நகை பறிப்பில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் தளர்வால் எதிர்க்க முடியாது, எளிதில் காரியத்தை முடித்து விடலாம் என திட்டமிட்டு, இந்த செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஓட்டப் பிடாரத்தில் இரண்டு முதியவர்களை தாக்கி நகைகளை பறித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி (72). இவர் ஓட்டப்பிடாரம் சாலையில் நேற்று அதிகாலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறுக்குச் சாலை வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், கிருஷ்ணசாமியிடம் ‘புளியம்பட்டிக்கு எப்படி செல்ல வேண்டும்?” எனக் கேட்டுள்ளனர். வழி சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர் அணிந்திருந்த மோதிரத்தை பறிக்க முயன்றனர்.
சத்தம்போடவே, ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் கிருஷ்ணசாமியை தாக்கிவிட்டு 2.5 பவுன் மோதிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர். தொடர்ந்து, அதே நபர்கள் நீதிமன்றம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் மாடசாமி (60) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 பவுன் செயின், 2.5 பவுன் கை செயின், 1.5 பவுன் மோதிரத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதிகாலையில் தனியாக நடை பயிற்சி செல்லும் போது நகைகள் அணிந்து செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என, போலீஸார் தெரிவித்தனர்.