Published : 06 Jun 2023 11:41 AM
Last Updated : 06 Jun 2023 11:41 AM
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் 20 வயது இளைஞரை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சிறுவர்கள். கொலை செய்யப்பட்ட நபரின் பிறந்தநாள் பார்ட்டி உணவு ரசீதுக்கான தொகையை பகிர்ந்து கொள்கிற விவகாரத்தில் இந்த குற்ற செயல் நடைபெற்றுள்ளது.
இந்த குற்றம் தொடர்பாக மகாராஷ்டிராவின் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறைச்சாலைக்கும், இருவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த மே 31-ம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு பிறந்தநாள். அன்றைய தினம் தனது நண்பர்களுடன் அவர் ஒரு தாபாவில் உணவருந்தி உள்ளார். அதற்கான கட்டணம் ரூ.10,000 என ரசீது வந்துள்ளது. அந்த கட்டணத்தை பகிர்ந்து கொள்வதாக தனது நான்கு நண்பர்கள் சொல்லவே அந்த தொகையை கொலை செய்யப்பட்டவர் செலுத்தி உள்ளார்.
அன்றைய தினம் சிவாஜி நகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட நபர், தனது மற்ற நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு கொலையாளிகளும், அவரை அடித்து, கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளனர். அதில் மோசமாக அவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் கொலை வழக்காக பதிவு செய்து நான்கு பேரையும் போலீசார் தேடியுள்ளனர். அதில் இருவரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய இருவரை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT