

திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனங்களிடம் ரூ.11.62 கோடிக்கு ஆடை பெற்று மோசடியில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பனியன் நிறுவன உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மனுக்கள் அளித்தனர்.
திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர்கள் அளித்த மனு: திருப்பூரில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை சிறிய அளவில் நடத்தி வருகிறோம். மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களான ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் சென்னையில் நிறுவனம் நடத்தி வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் எங்களிடம் பெற்ற ஆடைகளுக்கு மே மாத இறுதியில் அவர்கள் வழங்கிய காசோலை திரும்பிவந்தது. எங்கள் 70 பேரிடம் ரூ. 11 கோடியே 62 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பலரும் வங்கிக் கடன் பெற்று இந்த தொழில் நடத்தி வருகிறோம். மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். அதன்பின் தொடர் நடவடிக்கை இல்லை. முதலீடுகளை இழந்துள்ள நிலையில் எங்களுக்கு அரசிடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பல்லடம் ஒன்றியக் குழுவினர் அளித்த மனு: பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சாமிக்கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். போதிய பேருந்து வசதி இல்லாததால், குறித்த காலத்துக்குள் மாணவ, மாணவிகளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பள்ளி நேரங்களான காலை 8 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும்.
திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார் தலைமையில் மக்கள் அளித்த மனு: திருமுருகன்பூண்டி நகராட்சி 27 வார்டுகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. நகராட்சியில் 2011-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகை 31,528 ஆகும். தற்போதைய மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. சொத்து வரி விதிப்புகள் 13,616, குடிநீர் இணைப்புகள் 9,215 உள்ளன. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சிக்கு 5 எம்.எல்.டி. குடிநீர் தேவைப்படுகிறது.
திருமுருகன் பூண்டி நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் வி.ஜி.வி. கார்டன், அம்மாபாளையம், தேவராயம்பாளையம், பாலாஜி நகர், ராக்கியாபாளையம் காந்திஜி வீதி, தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி வழியாக மேட்டுப்பாளையம் முதல் திருப்பூர் வரை அம்ரூத் திட்டத்தின் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த திட்டத்தின் மூலம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.