சென்னை | நைஜீரியாவில் பணிபுரிந்தவரை ஏமாற்றி ரூ.2.05 கோடி பறித்தவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை | நைஜீரியாவில் பணிபுரிந்தவரை ஏமாற்றி ரூ.2.05 கோடி பறித்தவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: நைஜீரியாவில் பணிபுரிந்தவரை ஏமாற்றி ரூ.2.05 கோடி பறித்த போலி சாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முத்து கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணி (52), நைஜீரியாவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த கவுதம் சிவசாமி என்பவர், வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரில், “குடும்ப நண்பராக பழகி வந்த கேரளாவைச் சேர்ந்த சுப்பிரமணி தன்னை ஒரு ஆன்மீகவாதி என்றார்.

மறைந்த எனது தாயார் அவருடன் பேசி வருவதாகக் கூறி, அதற்காக பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், சென்னையில் உள்ள எனது தந்தையை கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்து என்னிடம் ரூ.2.05 கோடியை பல்வேறு தவணைகளில் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த போலி ஆன்மீகவாதியான சுப்பிரமணியை கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, சுப்பிரமணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in