Published : 05 Jun 2023 12:44 PM
Last Updated : 05 Jun 2023 12:44 PM

கடன் மற்றும் தொழில் நஷ்டம்: தருமபுரி அருகே ஆன்லைனில் தகவல் திரட்டி நூதன முறையில் தாய் - மகன் தற்கொலை

தருமபுரியில் கடன் பிரச்சினை, தொழில் நஷ்டம் காரணமாக  நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி இளைஞர் விஜய் ஆனந்த்

தருமபுரி: தருமபுரியில் கடன் பிரச்சினை மற்றும் தொழில் நஷ்டத்தால் ஆன்லைனில் தகவல் திரட்டி, நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் கோவிந்த சாமி கவுண்டர் தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல் (72). இவர் மனைவி சாந்தி ( 56). இவர்களின் மகன் விஜய் ஆனந்த் (35). பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த் போட்டித் தேர்வுகளுக்கு முயன்றும் பணி கிடைக்காததால் நண்பர்களுடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்சினையால் விஜய் ஆனந்த் மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகிய இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். நேற்று (ஞாயிறு) பகலில் பழனிவேல் பாலக்கோடு அருகில் உள்ள தங்களது விவசாய நிலத்தை பார்த்து வர சென்றுள்ளார். மாலையில் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தன்னிடம் இருந்த சாவி மூலம் வீட்டை திறந்து அவர் உள்ளே சென்றபோது வீட்டினுள் உள்ள அறை ஒன்றும் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

அந்த அறைக் கதவின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த தாளில், 'அறைக்குள் நைட்ரஜன் கேஸ் உள்ளது. எனவே கதவை உடைத்து உள்ளே வரும் முன் காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்புடன் நுழையவும்' என்று ஆங்கிலத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல் தன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அதியமான் கோட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அசைவற்று படுத்து கிடந்தனர். அவர்களை பரிசோதித்த போது இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில், தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்சினையால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்வது தொடர்பாக ஆன்லைன் மூலம் தகவல் திரட்டி, 2 நைட்ரஜன் கேஸ் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனைக்கு காரணமானவர்கள் குறித்து விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x