Published : 05 Jun 2023 06:45 AM
Last Updated : 05 Jun 2023 06:45 AM
திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பொறுப்பற்ற அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கடந்த 23-ம் தேதி புகுந்த நபர், சிலைகளை உடைத்ததுடன், வேல்உள்ளிட்ட பொருட்களைத் திருடிக்கொண்டு கோயில் ராஜகோபுரத்தில் பதுங்கியிருந்தார். அவரைபிடித்து விசாரித்ததில் வெள்ளமடைபகுதியைச் சேர்ந்த சரவணபாரதி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்த போலீஸார், சரவணபாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி-யும், உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநிலத் தலைமை ஆலோசகருமான பொன்.மாணிக்கவேல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலைநேற்று பார்வையிட்டார்.அப்போது,சிவனடியார்கள் உள்ளிட்டோர் ஒடிசா மாநில ரயில் விபத்தில்உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டியும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.மாணிக்கவேல் கூறும்போது, "அவிநாசி கோயிலில் சம்பவம் நடந்த பிறகும், இங்கு வராத இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், ஆணையர் உள்ளிட்டோரின் சம்பளத்தை பறித்து கோயிலுக்கு அளிக்க வேண்டும்.
கோயில்களின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு ரூ.44 கோடி செலவு செய்கிறார்கள். ஆனால், பாதுகாப்பு பணியில் உடல் தகுதியில்லாத முதியவர்கள், நோயாளிகளை ஈடுபடுத்துகிறார்கள். கோயிலை விட்டு இந்து சமய அறநிலையத் துறையினர் வெளியேற வேண்டும்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு அலாரம், சில சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோயில்இணை ஆணையர், திறமையற்றகோயில் செயல் அலுவலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். இருவருக்கும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு பாதி சம்பளம் மட்டும் தர வேண்டும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பொறுப்பற்ற அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். சிலையை உடைப்பதற்கு என யாரும் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றுவதில்லை. பிடிபட்டவர், உண்மையிலே மனநோயாளியா, அவரது பின்னணி குறித்துகண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி, தமிழகத்தில் எந்த ஒரு தொன்மையான கோயில்களிலும் குற்றச்சம்பவங்கள் நடக்கக்கூடாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT