

ராமநாதபுரம்: முன்விரோதம் காரணமாக ராமநாதபுரம் நீதிமன்றத்துக்குள் புகுந்து, இளைஞரை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் அசோக்குமார் (28) மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கேணிக்கரை காவல் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவரை தாக்கிய வழக்கில் கைதான அசோக்குமார், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண்- 2) கையெழுத்திட்டு வருகிறார்.
இதன்படி, நேற்று காலை 10 மணியளவில் நீதித்துறை நடுவரின் அறைக்குள் கையெழுத்திடுவதற்காக நின்று கொண்டிருந்த அசோக்குமாரை, ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார் (28), சண்முகநாதன் (22) ஆகியோர் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
நீதிமன்றத்தில் இருந்த போலீஸார் அசோக்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொக்கி குமார், சண்முகநாதனைத் தேடி வந்தனர். பின்னர், உச்சிப்புளி அருகே கொக்கி குமாரை கைதுசெய்தனர். திடீரென, காவல் ஆய்வாளர் ஆடிவேல், உதவி ஆய்வாளர் தினேஷ்பாபு ஆகியோரைத் தாக்கிவிட்டு, கொக்கி குமார் அங்கிருந்து தப்ப முயன்றார்.
அப்போது, அவரது முழங்காலுக்கு கீழ் 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு, கொக்கி குமாரை போலீஸார் பிடித்தனர். பின்னர் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, சண்முகநாதனையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை கூறியதாவது: ரவுடி அசோக்குமார், ஆர்.எஸ்மடை சந்துரு ஆகியோருக்கிடையே தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், சந்துருவுக்கு ஆதரவாக, அசோக்குமாரை நீதிமன்றத்தில் கொக்கி குமார் கொல்ல முயன்றார்.
கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீஸார், உச்சிப்புளி அருகே கொக்கி குமாரைப் பிடித்தனர். அப்போது அவர் தப்ப முயன்றதால், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவ்வாறு எஸ்.பி. கூறினார்.
தொடர் தாக்குதல்...
ரவுடி கொக்கி குமார் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருப்பூரில் தலைமறைவாக இருந்த கொக்கி குமார் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்துள்ளார். நேற்று காலை பசும்பொன் நகரில் பாலமுருகன் என்பவரை வெட்டிவிட்டுத் தப்பினார்.
பின்னர், கொத்தர் தெருவில் வசிக்கும் சூர்யா என்பவரைத் தாக்குவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அவர் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்ததால், அங்கிருந்து நீதிமன்றம் வந்து, அசோக் குமாரை வெட்டியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.