Published : 04 Jun 2023 10:20 AM
Last Updated : 04 Jun 2023 10:20 AM

கோவை கார் வெடிப்பு சம்பவம் | அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே சதி திட்டத்தின் நோக்கம்: குற்றப்பத்திரிகையில் தகவல்

கோவை கார் வெடிப்பு | கோப்புப்படம்

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில், அரசுக்கு எதிராகப் போா்தொடுப்பதே சதித் திட்டத்தின் நோக்கம் என்று குற்றப்பத்திரிகையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

போலீஸாரின் விசாரணையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு, தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான், முகமது தவுபீக் (25), உமர் பாரூக் (28), பெரோஸ் கான் (28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, துணை குற்றப்பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த முபின், கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், உமர் பாரூக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து , கோவையில் தொடர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் எடுத்த வீடியோவில், இந்த சம்பவம் தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். அசாருதீன், அப்சர்கான் ஆகியோர் முபினுக்கு வெடிமருந்துகள் வாங்கவும், ரசாயனங்களைக் கலக்கவும் உதவி செய்துள்ளனர். குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட காரை, முகமது தல்கா வழங்கிஉள்ளார்.

பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் காஸ் சிலிண்டர்கள், வெடி மருந்துகள் அடங்கிய டிரம்களை காரில் ஏற்றுவதற்கு உதவி செய்துள்ளனர். இந்த சதித் திட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் தீட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான தளபதியாக உமர்பாரூக் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். அவர், கைது செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

தொடர் தாக்குதல்...

காரில் வைக்கப்பட்டது போக மீதமுள்ள வெடிமருந்துகளை, தொடர்ச்சியான தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

உமர் பாரூக், முபின் ஆகியோர் பயங்கரவாத செயலுக்காக நிதிதிரட்டியுள்ளனர். சனோபர் அலியும்,பொருளாதார ரீதியாக முபினுக்கு உதவியுள்ளார். பெரோஸ்கான் தளவாடப் பொருட்களை அளித்துள்ளார்.

அரசின் பொது நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை போன்றவற்றைக் குறிவைத்து, அவற்றுக்கு எதிராகப் போர் தொடுப்பதே இந்த சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இவ்வாறு குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x