

சென்னை: மடிப்பாக்கத்தில் இயங்கிவரும் யோகா பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் லதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், ``காஞ்சிபுரம் வாஞ்சுவான் சேரி, வள்ளலார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த நளினி (48) என்பவர் என்னுடன் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர், தனது கணவர் சங்கர் (54) கட்டுமான தொழில் செய்வதாகவும், கீழ்க்கட்டளையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், ராம்நகரில் 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்ட இருப்பதாக கூறி அதற்கான வரைபடத்தை நளினி, அவரது கணவர் சங்கர் என்னிடம் காண்பித்தனர். முதல் தளத்தில் 887 சதுர அடி கொண்ட பிளாட்டை குறைந்த விலைக்கு தருவதாக கூறி முன்பணமாக ரூ.35 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால், உறுதி அளித்தபடி பிளாட்டை தரவில்லை. தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி விசாரணை நடத்தினார். இதில், லதா அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சங்கர், அவரது மனைவி நளினி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தார். பின்னர், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தார்.
தற்போது கைது செய்யப்பட்ட சங்கர், மடிப்பாக்கம் பகுதிகளிலுள்ள பல வீடுகளை வாடகைக்கு எடுத்து அந்த வீடுகளை வீட்டின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் பலருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை குத்தகைக்கு விட்ட வழக்கில் சிக்கி கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.