

சென்னை: சென்னை மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராமச்சந்திரன் (36), வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்துவந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமான ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே நிற்பதாக லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை தீயணைப்புப் படையினர் அடையாற்றில் ரப்பர் படகு மூலம் தேடுதல் பணியை தொடங்கினர். இதனிடையே, அடையாறு பாலத்தின்கீழ் பகுதியில் ராமச்சந்திரன் சடலம் மிதந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.