தி.நகரில் 1 கிலோ தங்கம், வைர நகைகள் திருட்டு: கொள்ளையன் தப்பிய நிலையில் நகைகளை மறைத்த மனைவி கைது

சுமதி

சுமதி

Updated on
1 min read

சென்னை: தி.நகரில் 1 கிலோ தங்கம், வைர நகைகள் திருடப்பட்ட வழக்கில், கொள்ளையன் தப்பிய நிலையில், நகைகளை மறைத்து வைத்த அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.

தி.நகர், திலக் தெரு, பாலாஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுஜாதா (60). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். கடந்த 1-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் அலுவலகத்துக்குச் சென்றார்.

வெளியூர் சென்ற அவரது கணவர் வெங்கடேஷ்வர ராவ் 4 நாட்களுக்கு பிறகு, அன்றைய தினம் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும், படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 1 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக, சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில், நகை திருட்டில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று தேடினர். இதையறிந்த, பிரபாகரன் கொள்ளையடித்த நகைகளின் ஒரு பகுதியை மனைவி சுமதியிடம் (47) கொடுத்து விட்டு தப்பினார்.

இதையடுத்து, திருட்டு நகைகளை வாங்கி மறைத்து வைத்த சுமதியை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 96 சவரன் தங்க நகைகள் மற்றும் 780 கிராம் வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள அவரது கணவர் பிரபாகரனை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>சுமதி</p></div>
பணி மூப்பின்படி பதவி உயர்வு வழங்கக் கோரி உண்ணாவிரதம்: நூற்றுக்கும் மேற்பட்ட வணிகவரித் துறை அலுவலர்கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in