

புதுடெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 796 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,46,93,506-ஆக உயர்ந்தது.
நேற்று மட்டும் கரோனாவால் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,795-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 4,41,57,685 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் 98.80 சதவீதமாக உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், அங்கு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில சுகாதாரத்துறைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மட்டுமே கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கண்டுள்ளோம். இதையடுத்து அங்கு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையானநடவடிக்கைகளை எடுக்குமாறுமாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். அங்கு சிறப்பு முகாம்களை நடத்திசோதனைகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்’’ என்றார்.