

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 288, பெண்கள் 194 என மொத்தம் 482 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 75 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 69,624 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 26,532 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 518 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,056 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விவரம்: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கடந்த 29-ம் தேதி தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்த நிலையில், நுரையீரல் செயலிழப்பு மற்றும் கரோனா தீவிரம் காரணமாக அவர் 1-ம் தேதி காலை 9 மணி அளவில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 485 ஆகவும், சென்னையில் 72 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 6,168 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 59,210 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9,685 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 212.75 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.