

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,495, பெண்கள் 1,227 என மொத்தம் 2,722 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 939 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 96,321 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து ,39,606 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,413 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,687 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,765 ஆகவும், சென்னையில் 1011 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 18,815 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 15,899 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 198.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம்பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கும் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. தற்போது பரவும் தொற்றானது குடும்பத்தில்ஒருவருக்கு வந்தால், அனைவருக்கும் பரவுகிறது.
ஆர்டிபிசிஆர்பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுஉறுதிசெய்யப்பட்டாலோ, தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 40சதவீதத்துக்கும் மேல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஆனால் தற்போது 5 சதவீதம்பேர் மட்டுமே தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய அவசியமில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியிலிருந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபடம் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட உள்ளது. கட்டுமான பணிகள் தொடங்க 6 மாதங்கள் ஆகும். கோவை மாவட்டத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வேண்டும் என்றகோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
கோவை போன்ற இடங்களில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்க கூடுதலாக ஒரு பதிவு மையம் அமைக்கப்படும். ஏழை மக்கள் மற்றும் இந்த காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் போன்றவர்கள் அவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை விரைந்து கிடைக்க உறுதுணையாக இருப்பார்கள்.
அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் எங்கெல்லாம் கேமராக்கள் இல்லையோ அங்கெல்லாம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.