

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,310 பெண்கள் 1,075 என மொத்தம் 2,385 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1025 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து,77,570 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து ,27,386 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,321 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,158 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,069 ஆகவும், சென்னையில் 909 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் 1000-ஐ கடந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 17,070 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 14,413 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.74 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்:
இதனிடையே, தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த நிலை நீடித்துக் கொண்டிருப்பதாகவும், பெரிய அளவில் உயிரிழப்புகள் போன்ற பாதிப்புகள் இல்லையென்றாலும், வேகமாக பரவும் தன்மை காணப்படுவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும், பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுகின்ற நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், அங்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கொள்வது அவசியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.