தமிழகத்தில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா; சிகிச்சையில் 10,000+
சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 995, பெண்கள் 832 என மொத்தம் 1,827 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 771 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து, 73,116 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 25,057 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 764 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,033 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,472 ஆகவும், சென்னையில் 624 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 14,506 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 11,574 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், "தமிழக்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை வரை 8,970 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சைகளை ஆய்வு செய்து வருகிறோம்.
31-வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே நோய் தடுப்பு முறை. மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் கல்வித் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டும். கூட்டத்துக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கட்சிக்காரர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அதை செய்வார்கள் என நம்புகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.
