

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 510, பெண்கள் 553 என மொத்தம் 1,063 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 497 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 64,131 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 20,931 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 567 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,174 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 771 ஆகவும், சென்னையில் 345 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது ஆயிரத்தை எட்டியுள்ளது தொற்று பாதிப்பு.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 13,313 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
83,990 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,972 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 196.62 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவி வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன்பு, அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம். எனவே, பெற்றோர்கள் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது.
தற்போது கரோனா பரவலின் பெரும் பகுதி பிஏ4, பிஏ5 என்ற வகை கரோனாவாக தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபணமாகி இருக்கிறது. தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார். | விரிவாக வாசிக்க > தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவுகிறது: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை