Published : 19 Jun 2022 04:01 AM
Last Updated : 19 Jun 2022 04:01 AM

இந்தியாவில் புதிதாக 13,216 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

புதுடெல்லி/சென்னை: நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,216 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,32,83,793-ஆகவும் மொத்த உயிரிழப்பு 5,24,840 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 113 நாட்களில் (4 மாதங்களில்) புதிய நோயாளிகள் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,045 அதிகரித்து 68,108-ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 0.16 சதவீதம் ஆகும். இதுவரை 4,26,90,845 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.63 சதவீதமாக உள்ளது.

கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.73 சதவீதமாகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 2.47 சதவீதமாகவும் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் 596 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 334, பெண்கள் 262 என மொத்தம் 596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 295 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 60,182ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 19,083 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும்217 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 3,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றுஉயிரிழப்பு இல்லை.

படுக்கைகள் ஒதுக்கீடு

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறைச் செயலர் செந்தில்குமார் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே, தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும். லேசான அறிகுறி இருப்பவர்களைத் தனிமைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, விட்டமின் சி, ஜிங்க் அடங்கிய மருந்துப் பெட்டகம் வழங்க வேண்டும்.

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் 50 முதல் 100 படுக்கைகளை கரோனாவுக்கு சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும். தொற்று பாதிப்புகண்டறியப்படும் பகுதிகளில், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பொது இடங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x