

சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.
கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் நாளை (மே 8) 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
2 கோடி பேருக்கு இலக்கு
முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சுமார் 30 லட்சம் பேருக்கும், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.50 கோடி பேருக்கும் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் பூஸ்டர் தவணை செலுத்திக் கொள்ளாத 60 வயதைக் கடந்தவர்கள் என மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.