

சென்னை: சென்னையில் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த 1,600 குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் இதுவரை 37,11,689 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 99% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 84% நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் 8-ம் தேதி மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த மெகா தடுப்பூசி முகாமிற்காக 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டிற்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள் 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தவுள்ளனர்.
இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபடவுள்ளனர்.
எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையிலேயே நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.