

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 2,483 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,30,62,569 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் புதிதாக 1,399 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,622 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,970 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 311ஆக உயர்ந்தது. தற்போது 15,636 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன் தினத்தை விட 886 குறைவு ஆகும். நாடு முழுவதும் நேற்று முன்தினம் 22,83,224 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 187 கோடியே 95 லட்சத்தை கடந்துள்ளது. இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.