Published : 20 Apr 2022 12:01 AM
Last Updated : 20 Apr 2022 12:01 AM

கோவிட்-19 | சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிப்பு

"பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பு: கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடும் சுகாதார பணியாளர்கள்களுக்கான காப்பீட்டு திட்டம்" 2022 ஏப்ரல் 19 முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களை சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தங்களது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் இடையே விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலர்கள்/முதன்மை செயலாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு 2022 ஏப்ரல் 19 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 மார்ச் 30 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் கரோனா நோயாளிகளை கையாளும் மற்றும் நோய் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்துள்ள சமுதாய சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 22.12 லட்சம் சுகாதார சேவை வழங்குனர்களுக்கு ரூபாய் 50 லட்சம் விரிவான தனிநபர் விபத்து காப்பீடு வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், எதிர்பாராத நிலைமையை கருத்தில் கொண்டு, மத்திய/மாநில மருத்துவமனைகள், தன்னாட்சி பெற்ற மருத்துவமனைகள், எய்ம்ஸ் மற்றும் தேசிய முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் கரோனா சேவைப் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பெறுவோர் உள்ளிட்டவர்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை கொவிட் பாதிப்பால் உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்கள் குறித்த 1905 கோரிக்கைகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x