

சென்னை: தமிழகத்தில் 2020 மார்ச் 7-ல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 படுக்கைகளைக் கொண்ட சிறிய பிரிவு முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 2-வதுஅலையின் உச்சத்தில் படுக்கைகளின் எண்ணிக்கை 2,050 ஆக உயர்ந்தது. 450 அதிதீவிர சிகிச்சைப் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
பின்னர், உள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், வெளி நோயாளிகளின் வருகை தொடர்ந்தது. சுமார் ஒரு மாதத்துக்கு முன் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான கரோனா நோயாளிகள் சிறிய வார்டில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஒரு உள் நோயாளியும் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கரோனா நோயாளிகள் அறவே இல்லாத தருணத்தை, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மருத்துவமனை எட்டியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "கரோனா தொற்று சவாலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி, பெரிதும் ஊக்கமளித்த முதல்வருக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
இதேபோல, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 17 நாட்களாகவும், கீழ்பாக்கத்தில் ஒரு மாதமாகவும், கிண்டி அரசு மருத்துவமனையில் 20 நாட்களாகவும் கரோனா நோயாளிகள் இல்லாத நிலை உள்ளது. ஓமந்துாரார் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 நாட்களாக கரோனா நோயாளிகள் இல்லாத நிலை உள்ளது.
இதனால் 2 ஆண்டுகளாக சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.