

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 25-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கேரளாவில் நேற்று முன்தினம் 847 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டதில், 59 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள - தமிழக எல்லை பகுதிகளில் போக்குவரத்துக்கான 13 வழிகள் இருப்பதால், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அதேபோல, பல ஆசிய நாடுகளிலும் பெரிய அளவில் தொற்று வேகமாகப் பரவுகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.