

வாஷிங்டன்: கரோனாவுக்கு எதிராக உலக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக மாத்திரையை பைஸர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை 12 வயது மற்றும் அதற்கு மேல் வயதுள்ள பிரிவினருக்கு வழங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பைஸர் நிறுவனத்தின் “பாக்ஸ்லோவிட்” மாத்திரை நிச்சயம் திருப்புமுனையாக அமையும்
அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “கரோனா வைரஸுக்கு எதிராக பைஸர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் (நிர்மாட்ரெல்விர், ரிட்டோனவிர் மாத்திரை) மாத்திரையைப் பதின்பருவத்தினர், மற்றும் உடல் எடை 40 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரையைப் பரிசோதித்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்றவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைத்ததையடுத்து, மாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க எப்டிஏவின் மருந்து ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் மருத்துவர் பத்ரிஜியா கவாஜோனி கூறுகையில், “கரோனா வைரஸுக்கு எதிராக பைஸர் நிறுவனம் அறிமுகம் செய்த மாத்திரை, மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.
கரோனா வைரஸின் புதிய உருமாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்குரிய சிகிச்சைக்கு சரியான நேரத்தில் இந்த மாத்திரை கிடைத்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிரமான நிலைக்குச் சென்றவர்களுக்கு இந்த மாத்திரை பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
பைஸர் நிறுவனம் அறிமுகம் செய்த பாக்ஸ்லோவிட் மாத்திரையில் நிர்மாட்ரெல்விர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகள் உள்ளன. இதில் நிர்மாட்ரெல்விர் மருந்து சார்ஸ்கோவிட் வைரஸ் தனது புரதத்தை பிரதி எடுக்கவிடாமல் தடுத்துவிடும், நிர்மாட்ரெல்விர் மாத்திரை புரதத்தைத் தடுத்து நிறுத்தியதை நீண்ட நாட்களுக்குச் செயல்பட வைக்கும் மாத்திரை ரிடோனாவிர். பாக்ஸ்லோவிட் மாத்திரை என்பது 2 நிர்மாட்ரெல்விர், ஒரு ரிடோனாவிர் மாத்திரையாகும். இந்த மாத்திரையை 5 நாட்களுக்கு காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 5 நாட்களுக்கு மேல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் எடுக்கக் கூடாது