

பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “கரோனாவுக்கு எதிரான முதல் மாத்திரையை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. கரோனா அறிகுறி தென்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகள் 90% பயனளிக்கக் கூடியவை. இது வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத்திரைகள் கரோனா ஏற்படுத்தும் தீவிரத் தன்மையை குறைக்கக் கூடியவை, மரணத்தைத் தவிர்க்கக் கூடியவை. மாத்திரைகளை உடனடியாக உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு வழங்க உள்ளோம்” என்று பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத்திரைகளை 'பாக்ஸ்லோவிட்' என்ற பெயரால் விற்பனை செய்ய இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.