

திருவண்ணாமலை: காங்கோவில் இருந்து சென்னை வந்த ஆரணி பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு 38 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மகனுடன் கடந்த 12-ம் தேதி வந்துள்ளார். அவர்கள் மூவருக்கும் விமான நிலையத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்துள்ளனர்.
ஒமைக்ரான் அறிகுறி
இந்நிலையில் 3 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில், அப்பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது கணவர் மற்றும் மகனுக்கு கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து செய்யாறு சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் பிரியாராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, ஒமைக்ரான் அறிகுறி உள்ளதென கூறப்பட்ட பெண்ணை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு ஒமைக்ரான் மற்றும் கரோனா பரிசோதனை செய்யும் பணியை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பரிசோதனை செய்துகொள்வதில், சிலர் ஆட்சேபனை தெரிவித்ததால், அவர்களிடம் ஒமைக்ரான் தன்மையை உணர்த்தி பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். நேற்று வரை 15 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் குழு கண்காணிப்பு
இதன் முடிவுகள் வெளியாகும் வரை, அவர்கள் அனைவரும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களை கண்காணிக்கும் பணியில் மருத்துவக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பையூர் கிராமத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.