

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து தயாராக வேண்டும் என்று ஐசிஎம்ஆர் இறுதிக்கெடு நிர்ணயித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து பலதரப்பட்ட அறிவியல் அமைப்புகளிடமிருந்தும் எச்சரிக்கைக் குரல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதாவது போதிய அவகாசமின்றி வாக்சின் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கோண்டு அதை மனிதப் பிரயோகத்துக்கு அவசரம் அவசமாகக் கொண்டு வருவது அபாயகரமானது என்று பல நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்திந்திய மக்கள் அறிவியல் வலைப்பின்னல் [The All India People’s Science Network (AIPSN)]அமைப்பும் கவலை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள் கறாரான விஞ்ஞான நடைமுறைகளின் படியும் வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐசிஎம்ஆர் இயக்குநர் சமீபத்தில் எழுதிய கடிதத்தில் ஹைதராபாத் நிறுவனமான பாரத் பயோ டெக் கோவிட்-19 வாக்சின் மருத்துவ பரிசோதனைகளை ஆகஸ்ட் 15க்குள் முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இது அறிவியல் நடைமுறைகளுக்கு உதவாது.
இது தொடர்பாக ஐசிஎம்ஆர்-ன் கீழ் பணியாற்றும் தேசிய வைராலஜி ஆய்வு மையத்துடன் சேர்ந்து ஈடுபட்டுள்ள பிபிஐஎல், கிளினிக்கல் பரிசோதனைகள் பதிவு அமைப்பிடம் அளித்த அறிக்கையில் மருத்துவ பரிசோதனை 3 கட்டங்களாக நடக்க வேண்டும் இதற்கு 15 மாதங்கள் ஆகும் என்று எடுத்துரைத்துள்ளது.
இருப்பினும் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் நாடு முழுதும் இது தொடர்பாக பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள 12 மருத்துவமனைகள் 6 வாரங்களுக்குள் பரிசோதனைகளை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. வாக்சின் பரிசோதனைகளை அவசரம் அவசரமாக முடிப்பது அறிவியலின் படி அபாயகரமானது. இது இந்திய அறிவியல் சமூகத்தின் மதிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தி விடும்., என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.ராஜமாணிக்கம், அரசியல் அறிவியலை வழிநடத்துவது ஆபத்தானது என்றார்.
அவர் மேலும் கூறும்போது, வாக்சின் தயாரிப்பில் லாபம் முதல் நோக்கமாக இருத்தல் கூடாது. தேவைப்படுவோருக்கு வாங்கக்கூடிய விலையில் இருப்பது அவசியம். அதே போல் வாக்சின் தயாரிப்பில் அரசியல் அழுத்தங்கள் இருக்கக் கூடாது. முறையான வழிகளை கடைப்பிடிக்கவில்லையெனில் மக்கள் பாதுகாப்பில் சமரசம் செய்து விடலாகாது, என்றார்.