

உலக அளவில் கரோனா பாதிப்பு 82 லட்சத்து 57 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கை 445, 986 ஆக உயர்ந்துள்ளது. 43 லட்சத்து 6 ஆயிரத்து 749 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுதும் இன்னமும் 35 லட்சத்து 5 ஆயிரத்து 150 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் டெக்ஸாமெதாசோன் என்ற ஒரு பழைய மருந்தான செலவு அதிகம் இல்லாத ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக்கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேர் மரணங்களைத் தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இது கரோனா தீவிரமாக பீடிக்காத நோயாளிகளுக்கு அவ்வளவாக உதவுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் இந்த டெக்ஸாமெதாசோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது, மிகவும் குறைந்த விலையில் இது கிடைத்து வருவது வெண்ட்டிலேட்டர் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த எழுந்துள்ள ஒரு நல்வாய்ப்பு, நற்செய்தியாகப் பார்க்கப் படுகிறது.
அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸி இது கரோனா சிகிச்சையில் கிடைக்கக் கூடிய மருந்துகளில் ஒரு குறிப்பிடத்தகுந்த கண்டுப்பிடிப்பாகும், முக்கியமானது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் உலகச்சுகாதார அமைப்பை நிர்வாகம் புரியும் விஞ்ஞானிகள், பெரிய அளவில் உலகமகா கிளினிக்கல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதாவது மீண்டும் சில பழைய சுவாசக்குழாய் மருந்துகளை கோவிட்-19 சிகிச்சைக்காக கிளினிக்கல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் டெக்ஸாமெதாசோன் மரண விகிதத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக தெரியவந்துள்ளது. வெண்ட்டிலேட்டர் உதவி தேவைப்படும் கரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு மரணவிகித்தை டெக்ஸாமெதாசோன் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகளில் ஐந்தில் ஒரு பங்கு மரண விகிதம் கட்டுப்படுகிறது.
ஆனால் சுவாச உதவி தேவைப்படாத கரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் பயனளிக்கவில்லை என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதே சோதனையில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கரோனாவுக்குப் பயன்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் இதன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது.
டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் என்பதால் தாறுமாறாக இதனைப் பயன்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன் இந்திய மருத்துவர்கள் இதனை அனுமதித்துள்ளனர்.