கோவிட்-19 பெருந்தொற்று நோயும் மறக்கப்படும் மனநலமும்!

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
6 min read

நான் கடந்த வாரம் என்னுடய புற நோயாளிகள் கிளீனிக்கில் உட்கார்ந்திருந்தேன். ஒரு நடுத்தர வயது மனிதர் கிளீனிக்கின் உள்ளே நுழைந்து "சார், கடந்த 5 நாளா என்னால தூங்க முடியவில்லை, இதய படபடப்பு வந்து உடம்பெல்லாம் திடீர் திடீர்னு வேர்க்குது... பயமா இருக்கு. எனக்கு, என் மனைவி அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது ஆயிருமோனு பயமா இருக்கு. ஏதாவது பண்ணுங்க சார்” என்றார்.

அவர் எப்போதுமே எதையாவது யோசித்துக் கொண்டிருப்பதாகவும், முன்பு போல் அவர் எங்களுடன் பேசுவதில்லை என்றும் அவரது மனைவி கூறினார். சில கேள்விகளைக் கேட்டபின், கரோனா பரவ ஆரம்பித்தவுடன் இத்தகைய பதற்ற நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்தேன். இதைப் படிக்கும் பொழுது உங்களில் சிலர் இது மாதிரியான அனுபவத்தின் வழியாக இப்பொழுது சென்றுகொண்டிருக்கலாம்.

நான் சார்ந்திருக்கும் உலகின் பல்வேறு நோய்களின் பரவல் மற்றும் இறப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் (Global burden of diseases collaborators) 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில், 19.7 கோடி மக்களுக்கு மனநலன் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததாகவும், இதில் 4.57 கோடி மக்கள் மனச்சோர்வு (depression) மற்றும் 4.49 கோடியினர் பதற்றக் கோளாறுகளால் (Anxiety disorders) பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் கணக்கிட்டுள்ளார்கள்.

இத்தகைய மனநல பாதிப்புகளால், தற்கொலைகளில் இந்தியா உலக அளவில் முன்னணி வகிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 314 பேர் 2016-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

"வைரஸிலிருந்து நாங்கள் எவ்வாறு தப்பிக்கலாம் என்று நாள்தோறும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மன ஆரோக்கியத்தைப் பற்றி நாங்கள் எவ்வாறு சிந்திக்க முடியும்? அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?" என நீங்கள் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது மூன்று செய்திகள் என்னைப் பாதித்தன. முதலாவது, கோவிட்- 19 வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஜெர்மனி நிதியமைச்சர். இரண்டாவதாக, கரோனா பாதிக்கப்பட்டதாக எண்ணி ஒருவர் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு. மூன்றாவது, மதுரையில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் நிர்வாணமாக வெளியே ஓடி, ஒரு மூதாட்டியை கடித்துக் கொன்ற சம்பவம்.

இந்தத் தொற்றுநோயின் போது ஏற்படும் மனநல நெருக்கடி பல வர்க்கத்தினரையும் வேறுபாடு இல்லாமல் பாதித்துள்ளதை அறியலாம். மேலும், அவை கரோனாவுடன் தொடர்புடையவையாக இருந்தாலும் காரணங்கள் வேறுபடுவதைக் காணலாம்.

ஆகவே, நம் நாட்டில் ஏராளமான மக்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என அறிகிறோம். இந்த பெருந்தொற்றுநோயின்போது அந்த எண்ணிக்கை உயரப் போகிறது என்பது திண்ணம். இந்த தொற்றுநோய் ஒருவரை மனநல நெருக்கடிக்குத் தள்ளக்கூடிய சாத்தியமான காரணங்கள் என்னென்ன?

தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் ஊரடங்கு

கரோனா தொற்று நோய் தொடங்கியதிலிருந்து, 'தனிமைப்படுத்தப்படுதல்' என்ற வார்த்தையை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பெரும்பாலான மக்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது, அவர்கள் குடும்பத்தினருடன் பேசவோ அவர்களுடன் சாப்பிடவோ முடியாது. அவர்கள் தங்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் தங்கள் அறைகளுக்குள்ளேயே உணவு உள்ளிட்ட காரியங்களை முடித்துக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்படுவார்கள்.

இத்தகைய நபர்கள் குடும்பத்தினரைப் பார்க்க இயலாது. ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதுவரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கம் அதிகமுள்ள இக்காலத்தில் வாழ்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின், வீட்டில் முடங்கிக் கிடப்பது மிகக் கடினமாக உள்ளது.

ஏனெனில் மனிதன் இயற்கையாகவே ஒரு சமூக விலங்கு. குடும்பங்கள் இல்லாத வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள். நம் நாட்டில் 10-20% வயதானவர்கள் ஏற்கெனவே தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6% மூத்த குடிமக்கள் தனியாக வாழ்கின்றனர் என்று 'ஹெல்ப் ஏஜ்' நிறுவனம் கூறுகிறது.

இத்தகைய தனிமை பொதுவாக மனரீதியாக கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் 3 முக்கியக் காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளுக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

நோயைக் குறித்த பயம் மற்றும் பீதி

இந்த ஊரடங்கு நாட்களில், கரோனா குறித்த புள்ளிவிவரங்களைப் பார்ப்பதில் நம் நேரத்தை அதிகம் செலவிடுகிறோம். அதைக் குறித்த தொடர்ச்சியான சிந்தனை எதிர்காலத்தைக் குறித்த பயம் மற்றும் கவலைக்கு வழிவகுக்கிறது. இது பொதுவாக தூக்கமின்மை, திடீரென வியர்த்தலுடன் கூடிய படபடப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. இது மனச்சோர்வுடன் ஒன்றிணைந்து, வழக்கமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி குறைதல் ஆகிய அறிகுறிகளாக வெளிப்படுகிறது.

சமுகப் பார்வையும், பாகுபாடும்

மருத்துவ உலகில், ஹெச்ஐவி, தொழுநோய் போன்ற குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் சமூகப் புறக்கணிப்பு பற்றி பொதுவாக பேசுவோம். கரொனா நோய் குறித்த சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இதேபோன்ற பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளின் பட்டியல் வாட்ஸ் அப்பில் அதிகமாக பரவி வந்தது. தங்கள் சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்கள் யாரவது இருக்கிறார்களா என்று அனைவரும் பயத்துடன் அப்பட்டியலைச் சோதித்துக் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனால், இந்த மக்கள் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்ததைப் போல பாகுபாடு பார்ப்பது நிச்சயமாக நல்லதல்ல.

இந்த மக்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுபவிக்கும் மன வேதனையை நாம் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது. அண்மையில், உயிர்களைக் காப்பாற்றுவதில் முன்னணியில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களும் இதேபோன்ற பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்ற செய்தியும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பொதுவாக எரிச்சல், விரக்தி மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

வாழ்வாதாரமும் நம்பிக்கையற்ற நிலையும்

கரோனா உலகை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. உலகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், வணிகர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைத்துத் துறையினரும் தங்களுடய அனைத்துத் துறை சார்ந்த பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கரோனாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

திருமணம் போன்ற பல கனவுகளும் திட்டங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. குறிப்பாக, 21 நாள் ஊரடங்கு பல தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களை கடன் மற்றும் வறுமைக்கு தள்ளியுள்ளது. தேசியத் தலைநகரிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கு சாரை சாரையாக வெளியேறுவதை நாம் கண்டோம்.

அவர்களுக்கு அடுத்த வேளை உணவு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. நாளை பற்றிய அச்சம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களை மட்டுமல்ல, அனைத்துத் துறையினறையும் முடக்கியுள்ளது. நாம் வேலையை இழந்து விடுவோமா? அல்லது சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்குமா? என்ற பயம் உள்ளது.

எல்லா வர்க்கத்தினரும் நம்பிக்கையற்ற மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு வந்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் நிச்சயமாக தீவிர மன அழுத்தம் மற்றும் தற்கொலைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

நடைமுறை பிரச்சினைகள்

இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு தேவையான 3 மனநல மருத்துவர்களுக்குப் பதிலாக 0.75 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அப்படியானால் இந்த அதிகரிக்கப் போகும் மனநலச் சிக்கல்களை எப்படி கையாளப் போகிறோம்?.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளின் சேவைகள் மூடப்பட்டுள்ளன. இத்தகைய மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி தேவைப்பட்டாலும் கூட உரிய நேரத்தில் கிடைப்பது சிக்கலாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் ஊரடங்கு உத்தரவினாலும், இருப்பு இல்லாததினாலும் தங்கள் மாதாந்திர மருந்து கிடைக்கவே பெரும் அல்லல்படுகிறார்கள். இந்த தொற்றுநோய் முடிந்தவுடன் தற்கொலைகள் கரோனாவை விட அதிகமான மக்களைக் கொல்லக்கூடும் என்று அச்சமடைகிறேன்.

கேரள அரசு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் பேச சிறப்புத் தொலைபேசி உதவியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் பாராட்டத்தக்க மனநல நோயின் தன்மையைக் குறைப்பதற்கு ஒரு அற்புதமான படியாகும்.

நாம் எப்படி உதவலாம்?

பொதுமக்களாக நாம் எவ்வாறு உதவ முடியும்? மனநல நெருக்கடியில் சிக்குவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? உலக சுகாதார அமைப்பின் சில அறிவுறுத்தல்களோடு சேர்த்து சில பரிந்துரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. இந்த ஊரடங்கு காலம் ஓய்வெடுக்கவும் மீண்டும் புத்துயிர் பெறவும் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த நேரம். உங்கள் வாழ்க்கையில் இந்த நேரம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காமல் கூட போகலாம். ஒரு வழக்கமான நடைமுறை மற்றும் அட்டவணையைப் பின்பற்ற முடிந்தவரை முயற்சியுங்கள். உடற்பயிற்சி, துப்புரவு, தினசரி வேலைகள், பாடுதல், நடனம், ஓவியம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். அந்த பள்ளி அல்லது கல்லூரி நண்பனுடன் மணிக்கணக்கில் பேச நாங்கள் ஏங்கியிருப்போம். ஆனால், வேலைப்பளுவின் காரணமாக செய்திருக்க முடியாது. அன்புக்குரியவர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. இப்போதுதான் அலைபேசி, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் என பல ஊடகங்கள் உள்ளனவே.

2. கோவிட்- 19 பல புவியியல் இடங்களில், பல நாடுகளை, மாநிலத்தவரை மற்றும் இனத்தவரைப் பாதித்துள்ளது. கோவிட்- 19 உள்ளவர்களைக் குறிப்பிடும்போது, எந்தவொரு குறிப்பிட்ட இனத்துடனும், மாநிலத்துடனும், தேசியத்துடனும் இந்த நோயை இணைக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களிடமும் பரிவுணர்வுடன் இருங்கள். கோவிட்- 19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எந்த தவறும் செய்யவில்லை, அவர்கள் நம்முடைய ஆதரவு, இரக்கம் மற்றும் கருணைக்கு தகுதியானவர்கள். குறிப்பாக, உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் சுய தனிமை அல்லது கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தால், அவர்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய குறைந்த விஷயம், அவர்களை அடிக்கடி அலைபேசியில் அழைப்பதும், அவர்களை ஆதரிப்பதற்கும் நேசிப்பதற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். வயதான பெரியவர்கள், குறிப்பாக தனிமையில் இருப்பானார்களானால் அவர்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவை வழங்குங்கள்

3. பாகுபாடுகளைக் களைய நோயால் உலக சுகாதார நிறுவனம் சில பதங்களைப் பயன்படுத்த வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களை 'கோவிட்-19 ஆல் தாக்கப்பட்டவர்கள்', 'பாதிக்கப்பட்டவர்கள்' 'கோவிட்-19 குடும்பங்கள்' அல்லது 'நோயுற்றவர்கள்' என்று குறிப்பிட வேண்டாம். அவர்கள் 'கோவிட்-19 உடையவர்கள்', 'கோவிட்-19-க்கு சிகிச்சையளிக்கப்படுபவர்கள்' அல்லது 'கோவிட்-19-ல் இருந்து மீண்டு வருபவர்கள்' என்று குறிப்பிடவும். கோவிட்-19 இல் இருந்து மீண்ட பிறகு அவர்களின் வாழ்க்கை அவர்களின் வேலைகளுடன், குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடரும். இத்தகைய பாகுபாடுகளை குறைக்க, ஒரு நபரை 'கோவிட்-19' என்ற அடையாளத்திலிருந்து பிரிப்பது முக்கியம்.

4. நீங்கள் சுய தனிமை அல்லது கட்டாயத் தனிமையில் இருப்பீர்களானால், வெளி உலகத்துடன் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து இணைந்திருங்கள். இந்தப் போரில் நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்

6. கோவிட்- 19 பற்றிய செய்திகளை அடிக்கடி பார்ப்பது, படிப்பது அல்லது கேட்பதைக் குறைப்பதின் மூலம் கவலை அல்லது மன உளைச்சலை குறைக்கலாம்; நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைத் தேடுங்கள்.

ஒன்று அல்லது இரண்டு முறை பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோவிட்- 19 பற்றிய புதிய தகவல்களைப் படியுங்கள். திடீர் மற்றும் தொடர் செய்தி அறிக்கைகள் உறுதியான உள்ளம் கொண்டவரையும் கலக்கமடையச் செய்யும். உண்மையான தகவல்களைப் பெறுங்கள்; வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அவற்றைப் பரப்பவும் வேண்டாம். வதந்திகளிலிருந்து உண்மைகளை வேறுபடுத்தி அறிய உதவும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் வலைதளம் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகார தளங்களில் இருந்து சரியான இடைவெளியில் தகவல்களைச் சேகரிக்கவும்.

இவை தேவையற்ற பயத்தைக் குறைக்க உதவும். நீங்கள் ஒரு புத்தக ஆர்வலராக இருந்தால், நீங்கள் இதுவரை படிக்க விரும்பிய அனைத்தையும் படிக்க நேரம் செலவிடுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவரானால், அதிக நேரம் பிரார்த்தனையில் செலவிடுங்கள்.

7. நிபுணர்களின் கருத்து மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் சில ஆறுதலான தகவல்களை நான் உங்களுக்கு கூறுகிறேன். நாம் ஒரு உலகளாவிய பெறுந்தொற்று நோயின் நடுவில் இருக்கிறோம். நம்மில் எல்லாரும் இல்லையென்றாலும் பெரும்பாலானோர் தொற்றுநோயைப் பெறுவார்கள். கணிசமான எண்ணிக்கையினருக்கு லேசான அறிகுறிகள் கொண்ட தொற்றே ஏற்படும்.

மேலும், மற்றொரு கணிசமான மக்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இன்றி வைரஸின் பாதிப்பு கடந்து செல்லும். குறைவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வயதானவர்கள் மட்டுமே கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு தீவிரமான மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது இறக்க நேரிடும்.

எனவே, நீங்கள் கரோனா தொற்றுக்குள்ளானால், அது உலகத்தின் முடிவு அல்ல, நீங்கள் உறுதியாக இறக்கப் போவதில்லை. நீங்கள் குணமடையவே அதிக வாய்ப்புள்ளது. எனவே பயத்தை அகற்றுங்கள்.

8. நமக்கு அருகில் உள்ள உதவி தேவைப்படும் முக்கியாமாக தினசரி ஊதியத்தை நம்பி வாழும் நபர்களைத் தேடுவோம். அவர்களுக்கு உணவு அல்லது சில நிதி உதவி செய்வோம். இந்த மாதத்திற்கான வாடகையை நீங்கள் தள்ளுபடி செய்யலாம். இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்கு வரவில்லையன்றாலும் நமக்குக் கீழ் பணிபுரியும் வீட்டு உதவியாளர்கள், ஓட்டுநர்கள் போன்றோருக்கு முழு ஊதியத்தையும் கொடுப்போம். இவை நிதி நெருக்கடியைக் குறைத்து மனச்சோர்வு மற்றும் தற்கொலைகளைக் குறைக்கும்.

அறிகுறிகள்

மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களை எப்படி அடையாளம் காணுவது? கீழ்க்கண்ட அறிகுறிகள் உள்ளனவா எனப் பாருங்கள்.

1. தூக்கமின்மை

2. பசியின்மை

3. வழக்கமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சி குறைவது

4. அடிக்கடி கோபப்படுவது

5. தனிமையை விரும்புதல் மற்றும் மற்றவர்களுடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது

6. படபடப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை

8. நம்பிக்கையற்றவராக உணர்தல்

9. விரக்தி

10. தற்கொலை எண்ணம்

தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலை முயற்சி ஆகியவற்றுக்கு உடனடியாக மனநல மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம்.

இறுதியாக, மனநலப் பிரச்சினைகள் தடுக்கக்கூடியவை. இந்த கரோனா நெருக்கடியின்போது இதை மேற்கொள்ள ஒரு சமூகமாக நமக்கு பொறுப்பு இருக்கிறது. அத்தகைய உதவி தேவைப்படுவோரைத் தேடுவோம், உதவி செய்வோம், பராமரிப்போம். உடல் ரீதியான தூரத்தைப் பராமரிப்போம். ஆனால் மனதால் ஒன்றுபடுவோம்.

இக்காலமும் கடந்து போகும்.!!

கட்டுரையாளர்: லீபர்க் ராஜா MBBS.,MD, நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதார மருத்துவ நிபுணர். தொடர்புக்கு: leeberk2003@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in