

கரோனா கண்காணிப்பில் விமானநிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் சுகாதாரத் துறை கோட்டை விடுகிறதோ என்ற அச்சமும் வருத்தமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து நோய் தொற்றுடன் தாயகம் திரும்பியவர்களாவர்.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து வந்தவர்..
கடந்த மார்ச் 17-ம் தேதி துபாயில் இருந்து திரும்பிய நபர் தான் தற்போது நெல்லை மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர். இவர் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வரும்போதே சற்று உடல் நலக் குறைவுடன் தான் வந்துள்ளார்.
திருநெல்வேலியில் இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் பெருமாள்புரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், ராதாபுரத்தில் உள்ள சமூகரங்கபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே, அவர் தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை எடுத்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் உபாதைகள் அதிகமாகவே நேற்று பிற்பகல் நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மூன்றரை மணி நேரத்தில் பரிசோதனை முடிவு தெரியவந்தது. அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது சொந்த ஊர், அவரது உறவினரின் ஊர் அவர் சென்றுவந்த இடங்களின் விவரங்களைக் கேட்டறிந்த சுகாதாரத் துறை முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
விமான நிலையத்தில் கோட்டைவிடும் சுகாதாரத் துறை..
விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர்க்கு வெறும் உடல் வெப்ப நிலை மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், மருத்துவ உலகம் அது நிச்சயமாகப் போதாது என்கிறது. ஒருவரின் உடலில் கரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்த குறைந்த 15 நாட்களாவது ஆகும் என்பதால் வெளிநாடுகளில் இருந்து வருவோரை வெகுஜனத்துடன் கலக்கவிடாமல் ஆங்காங்கே முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று விவரமறிந்தவர்கள் அறிவுறுத்துகின்றனர். என்னதான், இத்தத் தேதிவரை தனிமைப்படுத்துவதாக சீல் வைத்து அனுப்பினாலும் விமான நிலையத்திலிருந்து செல்வோர் அக்கறையுடன் பொறுப்புடனும் இருப்பதில்லை. அதனால் அங்கேயே தனிமைப்படுத்திருந்தால் இத்தகைய சிக்கலைத் தவிர்க்கலாம்.
மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் தமிழர்களை முறையாக சோதனைப்படுத்தாமல் சொந்த மாநிலத்துக்குச் செல்லுமாறு கேரளா அவசர அவசரமாக அனுப்பிவைப்பதாகவும் கூறப்படுகிறது. கேரளாவில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று, கேரளாவில் இருந்து புளியரையில் சோதனைச் சாவடிக்கு கரோனா அறிகுறியுடன் வந்த தமிழர்கள் மூவரும் ஆம்புலன்ஸுடன் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டனர்.
கரோனாவுடன் வரும் நோயாளிகளை சரியாகக் கண்காணித்து விமான நிலையத்திலிருந்து அரசே தனிமைப்படுத்தாமல் வெகுஜனங்களுடன் கலக்கச் செய்து தும்பை விட்டு வாலைப் பிடிக்க முயல்கிறது என்பதே விவரமறிந்தவர்களின் அங்கலாய்ப்பு.