Published : 23 Mar 2020 11:16 AM
Last Updated : 23 Mar 2020 11:16 AM

கரோனா: வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இலவச உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்குக; ராமதாஸ்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இலவச உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில், "பேரழிவு நோயாகவும், பெருந்தொற்று நோயாகவும் உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் மருத்துவ அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் மதிப்பிட முடியாத பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பொருளாதார இழப்பீடும் முக்கியமாகும்.

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பயணத்தை தவிர்த்துவிட்டதாலும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களின் இயக்கம் கிட்டத்தட்ட முடங்கி விட்டது.

இதனால், அதை வாழ்வாதாரமாகக்கொண்டவர்கள் அனைவரும் உணவு மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே சிரமப்படும் நிலையில், அவர்களால் வாகனக் கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவது என்பது எந்த வகையிலும் சாத்தியமற்ற விஷயமாகும்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, கரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. பாமகவும் இதை வலியுறுத்தி வருகிறது.

ஞாயிற்றுக் கிழமை பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று முழுமையான வெற்றி பெற வைத்தனர். அடுத்து அறிவிக்கப்படும் ஊரடங்குகளும் மக்களின் முழுமையான ஆதரவு இருந்தால் தான் வெற்றி பெறும்; அவ்வாறு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு, ஏற்ககெவே பெரும்பான்மை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு தேவையான இலவச ரேஷன் பொருட்கள், மருத்துவ உதவிகள், இரு மாதங்களுக்கான ஆதரவற்றோர், முதியோர் உதவித் தொகைகளை முன்கூட்டியே வழங்குதல் உட்பட மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரத்தில் முழு ஊரடங்கை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஜெகன்ரெட்டி, ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கப்படுவதுடன், தலா ரூ.1,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

தெலங்கானாவிலும் இம்மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பிறப்பித்துள்ளார். அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், 82 லட்சம் குடும்பங்களுக்கு தலா 12 கிலோ இலவச அரிசியும், ரூ.1,500 நிதியுதவியும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதேபோல், தமிழகத்திலும் ஏற்கெனவே இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் கூடுதல் அளவு அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், முதற்கட்டமாக 3,000 ரூபாயும், வாழ்வாதார இழப்பு ஏப்ரலிலும் நீடித்தால் வாரத்திற்கு ரூ.3,000 வீதமும் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

அதுமட்டுமின்றி, அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால், அவர்கள் ஏற்கெனவே வாங்கியுள்ள பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை அடுத்த சில மாதங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, அவற்றை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், அக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும். அதேபோல், காப்பீட்டுக்கான பிரீமியம், கடன் அட்டை தவணைகள், குழந்தைகளுக்கான பள்ளிக்கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதுடன், வங்கிக் கடனும் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x