தீவிரமாகும் கரோனா: மகாராஷ்டிராவில் 3-வது உயிரிழப்பு; இந்தியாவில் முதல் வெளிநாட்டவர் பலி

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
Updated on
1 min read


கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. இதுவரை உலகில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை நகரில் 68 வயது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவால் உயிரிழப்பு மூன்றாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிவி்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பிலி்ப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த முதியவர் முதலில் கரோனா தொற்று ஏற்பட்டவுடன், மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் கடந்த 13-ம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார்.

அங்கு அவரின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் நெகடிவ்வாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை, பாதிப்பிலிலருந்து மீண்டுவிட்டார் என்று அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையிலேயே நேற்று இரவு பிலிப்பைன்ஸ் நாட்டு முதியவர் உயிரிழந்தார். அவருக்கு நீண்டகாலமாகவே நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்து அதற்கு சிகிச்சை எடுத்துவந்துள்ளார். கரோனா பாதிப்பால் சுவசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 15 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மும்பையில் 14 பேர், புனேவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in