Published : 23 Mar 2020 10:33 AM
Last Updated : 23 Mar 2020 10:33 AM

கரோனா: அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்- அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கரோனா குறித்த அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்று கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

கரோனா பாதுகாப்பு எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பல நாடுகள் கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு பல நாடுகள் ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது. இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றனர்.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

இதற்கிடையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இந்நிலையில் கரோனா குறித்த அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளிநாட்டுக்கு சென்று வந்த சில பயணிகள், அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுகின்றனர். தனிமைப்படுத்தலை மீறி, சமுதாயப் பரவலுக்குக்கான காரணியாக மாறுகின்றனர்.

இத்தகைய நபர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x