

கரோனா வைரஸ் குறித்து அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை பரப்புவதால் மக்கள் மேலும் அச்சத்திற்கு உட்பட்டு பாதிக்கப்படுவார்கள் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில், "உலக மக்கள் கரோனா வைரஸ் தொற்று பரவலால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் உலக நாடுகள் கரோனா தடுப்புக்காக பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், நம் நாட்டிலும் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புக்காக மருத்துவம் சார்ந்தும் பல்வேறு வழிகளிலும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது பொதுமக்கள் கரோனா தடுப்புக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
ஆனால், சமூக ஊடகங்களில் கரோனா சம்பந்தமாக தேவையற்ற செய்திகள் பரப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கரோனா தடுப்புக்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஆர்வக்கோளாறு காரணமாக தவறான செய்திகளை, பொய்யான தகவல்களை பரப்புவது ஏற்புடையதல்ல. காரணம், கரோனா தொடர்பாக வதந்திகளை பரப்புவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுகிறது.
குறிப்பாக, செல்போன், கணினி, இணைய வசதி இருக்கிறது என்ற காரணத்திற்காக வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் மூலம் கரோனா பற்றி ஆதாரமற்ற, அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை பரப்புவதால் மக்கள் மேலும் அச்சத்திற்கு உட்பட்டு பாதிக்கப்படுவார்கள்.
எனவே, பொது மக்கள் ஒவ்வொருவரும் கரோனா தடுப்பு சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் சார்ந்த துறைகள் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் மூலமாக வெளியிடும் செய்திகளை கேட்டு, பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகளின் துறை சார்ந்த இணையதளங்களில் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.
தமிழக அரசு சமூக ஊடகங்களில் கரோனா சம்பந்தமாக தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. எனவே, கரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக அதிகாரப்பூர்வமற்ற, ஆதாரமற்ற செய்திகளை தெரிந்தோ, தெரியாமலோ பொது மக்கள் எவரும் சமூக வலைதளம் உள்ளிட்ட எந்த ஊடகத்தின் மூலமாகவும் வெளியிடாமல், பரப்பாமல் இருக்க வேண்டும்.
அதாவது, உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்ய வேண்டாம். கரோனா வைரஸ் சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் சார்ந்த துறைகள் வெளியிடும் செய்திகளை பொது மக்கள் நம்பி, விழிப்புடன் செயல்பட்டு, கரோனா வைரஸ் தொற்று நோயின் தடுப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.