அசாமுக்குள் நுழையும் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை, தனிமைப்படுத்தல்: மாநில அரசு

அசாமுக்குள் நுழையும் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை, தனிமைப்படுத்தல்: மாநில அரசு
Updated on
1 min read

அசாமுக்குள் நுழையும் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை குத்தப்பட்டு, 14 நாட்களுக்கு வீடுகளில் அவர் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகையே புரட்டிப் போடும் கரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்கு 390 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மார்ச் 31 வரை ரயில், மெட்ரோ, பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அசாம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாமுக்குள் நுழையும் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை குத்தப்பட்டு, 14 நாட்களுக்கு வீடுகளில் அவர் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைக் காலத்தில் தெருக்களிலோ, பொது இடங்களிலோ காணப்பட்டால் உடனடியாக காவல்துறையால் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் அனைத்து போக்குவரத்து மற்றும் வணிக வாகனங்கள் செல்ல செவ்வாய்க்கிழமை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுபவர்களை மற்றவர்கள் அடையாளம் கண்டு விலகி இருக்க ஏதுவாக கரோனா கண்காணிப்பில் இருப்பவர் என்ற முத்திரை கையில் குத்துப்பட்டது.

இந்தியாவில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட மற்றும் உயிர் பலி ஏற்பட்ட 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in