ஒத்தி வைக்கப்படாத பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள்; மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயல்: தினகரன் குற்றச்சாட்டு

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக அரசு மக்களைப் பாதிப்பின்றி காப்பாற்ற, 'ஈகோ' பார்க்காமல் செயல்பட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில், "உலகளவில் வரலாறு காணாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்தியாவும் போராடி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் எந்தளவுக்கு முழு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்கு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட சுய ஊரடங்கே சாட்சியாகும்.

எனினும், பிரதமர் கூறியிருப்பதை போல இது மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கம்தான். 'குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதனால் தான் நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் மட்டும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயலாகும். எனவே, எத்தனை தேர்வுகள் மீதம் இருந்தாலும் அவற்றை ஒத்தி வைக்க வேண்டும்.

மத்திய அரசு தலையிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 3 மாவட்டங்களை முடக்கி வைத்திருக்கும் நிலையில், இதற்குப் பிறகும் தமிழக அரசு நிலைமையின் தீவிரத்தை உணராமல் செயல்படுவது சரியானதல்ல. மக்களுக்கு சூழலை விளக்கி குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்துவதே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும்.

அதே நேரத்தில், அத்தியாவசிய பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

மேலும் கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகையையும் தமிழக அரசு வழங்க வேண்டும். டெல்லியில் செய்திருப்பதைப் போன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் கட்சிகளும், மக்களும் அரசோடு இணைந்து கரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கும்போது, தமிழக அரசும் மக்களைப் பாதிப்பின்றி காப்பாற்ற, 'ஈகோ' பார்க்காமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in