Published : 23 Mar 2020 08:00 AM
Last Updated : 23 Mar 2020 08:00 AM

கரோனா விடுமுறையும் குழந்தைகளும்!

சுஜாதா

விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண் டாட்டம்தான். ஆனால், இந்த கரோனா விடுமுறையை நாம் வழக்கமான விடுமுறை
போல பயன்படுத்த இயலாது. வெளியூர் செல்ல முடியாது. வெளியே செல்ல முடியாது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாட முடியாது. பக்கத்து வீட்டுக்குக்கூட செல்ல இயலாது. அவரவர் வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த இக்கட்டான சூழலை பெரியவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகள் என்ன செய்வார்கள். அவர்களைபாதுகாப்பாக வைத்திருப்பதோடு, மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா! என்ன செய்யலாம்?

நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லித் தருவதற்கான வாய்ப்பாக இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், குச்சிகளை அடுக்குதல், ஆடுபுலி போன்ற விளையாட்டுகளை குடும்பத்தோடு விளையாடி மகிழலாம். உங்களுக்கும் பால்யகாலம் நினைவுக்கு வரும். குழந்தைகளும் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்துகொள்வார்கள்.
‘நான் யார்?’ (Who am I) என்ற விளையாட்டு வயது வித்தியாசமின்றி எல்லோரையும் சுவாரஸ்யப்படுத்தும். ஒருவர் மனதுக்குள் பெயர், பொருள், இடம் போன்றவற்றை நினைத்துக்கொள்ள வேண்டும். எதிராளி கேள்விகள் கேட்க வேண்டும். பெயரை நினைத்தவர் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே சொல்ல வேண்டும்.

காந்தி என்று நினைத்தால், ‘உயிர் உண்டா?’ என்று முதல் கேள்வியை ஆரம்பிக்கலாம். ‘ஆம்’ என்றால் ‘இந்தியாவைச் சேர்ந்தவரா?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்கலாம். ‘தேசத் தலைவரா?’, ‘அகிம்சையின் அடையாளமா?’ என்று சில கேள்விகளில் ‘காந்தி’ என்ற பெயரைக் கண்டுபிடித்துவிடலாம். எவ்வளவு குறைவான கேள்விகளுக்குள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இந்த விளையாட்டின் சுவாரஸ்யம். இந்த விளையாட்டுக்கு நேரம், காலம் தேவையில்லை. தோன்றும்போது எல்லாம் விளையாடி மகிழலாம். பொது அறிவை வளர்க்கக்கூடிய அற்புதமான விளையாட்டு இது.

செய்தித்தாளைக் கொடுத்து, ஒரு பக்கத்தில் எத்தனை முறை ‘கரோனா’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வைக்கலாம். ஒரு கதையில் எத்தனை வார்த்தைகள் ஓர் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வைக்கலாம். ஆங்கிலம், தமிழ் அகராதியில் தினமும் 5 வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க வைக்கலாம்.

விடுகதைகள் சொல்லி, யார் சரியாக விடை சொல்கிறார்கள் என்று போட்டி வைக்கலாம். அதிக விடைகள் சொன்னவருக்கு பரிசு தரலாம்.

வீட்டிலேயே விநாடி-வினா நடத்தலாம். அறிவியல், வரலாறு, விளையாட்டு, சினிமா, அரசியல் போன்ற துறைகளில் கேள்விகள் கேட்டு, யார் அதிக அளவில் சரியான விடை சொல்கிறாரோ, அவருக்குப் பரிசு வழங்கலாம்.

குழந்தைகளிடம் அவர்களே ஒரு கதையைஉருவாக்கி, நாடகம் போடச் சொல்லலாம். அந்த நாடகத்தில் பெற்றோரும் கதாபாத்திரங்
களாக மாறி, நடித்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால், அவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். அவர்களுக்கு பொறுப்பு வந்ததுபோல தோன்றும். மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
வீட்டுக்குள் ஒரு பொருளை ஒளித்து வைத்துவிட்டு, ஆங்காங்கே குறிப்புகளை எழுதி வைத்துவிட வேண்டும். குழந்தைகள் அந்தப் புதையலைத் தேடி எடுப்பார்கள். இந்தப் ’புதையல் வேட்டை’ குழந்தைகளை மிகவும் சுவாரஸ்யப்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு வேறு என்ன செய்யலாம் என்பதை பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இங்கே வழங்கி உள்ளனர். இவை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் நிச்சயம் பயன்படும்.

கதை சொல்லலாம் வாங்க!

கதைசொல்லி சி.வனிதாமணி அருள்வேல், கதைக்களம் & பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம், ஈரோடு.

மின்னணு சாதனங்களில் இருந்து விலகி உயிர்ப் போடு நேரத்தை உருவாக் குவோம். உயிரும், உணர்வு மாக நாம் குழந்தைகளுடன் அமர்ந்து கதைகள் பேசி, சிறந்த தருணங்களைப் பரிச ளிப்போம். கதை சொல்வது, கதை கேட்பது என்று கதை கள் வழியாக எல்லா வயது குழந்தைகளின் பொழுதை யும் இனிமையாக்கலாம். பெற்றோர், பாட்டி, தாத்தாவோடு அமர்ந்து கதைகள் சொல்லும்போது அன்பும் நம்பிக்கையும் குழந்தைகளின் மனதில் அதிகரிக்கிறது.

தினமும் ‘கதை நேரம்’ என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை உருவாக் கிக்கொண்டு, குடும்பத்தில் உள்ள அனைவரும் கதை சொல்ல வேண்டும். அந்த நேரத்தையும், கதை சொல்லும் இடத்தையும் சுவாரஸ்யமாக்கலாம். இரவு உணவுக்குப் பிறகு வாசலில், திண்ணையில், மொட்டைமாடியில் கதை நேரத்தை அமைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

கதைக்கான கருவாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை வைத்துக்கொள்ளலாம், ஒருநாள் ‘காடு’ என்று வைத்துக்கொண்டால், எல்லோரும் காடு சார்ந்த கதைகளைச் சொல்ல வேண்டும். புதிர்க் கதைகள் சொல்லும்போதும், விளை யாட்டுகளோடு கதைகள் சொல்லும்போதும் பெரிய வர்களும் குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.

கதைகளை அமைதியாகவும், நிதானமாகவும் சொல்ல வேண்டும். தேவையான உடல்மொழியோடும் குரல் ஏற்ற இறக்கத்தோடும் சொல்ல லாம். குழந்தைகளுக்குப் பிடித்தமான பொம்மைகளைக் கையில் வைத் துக்கொண்டும் சொல்லலாம். வட்டமாக அமர்ந்து கதை மாலை உருவாக்கலாம். அதாவது, கதையின் இரண்டு வரிகளை ஒருவர் தொடங்க, அடுத்து இருப்பவர் தொடர என அனைவரின் கற்பனையில் ஒரு கதையை உருவாக்கலாம். 5 வார்த்தை கள் இருக்குமாறு சீட்டு எழுதி, குலுக் கிப் போட்டு ஆளுக்கொரு சீட்டு எடுத்து, அதில் உள்ள வார்த்தைகள் கதையில் வருமாறும் கதையை உருவாக்கலாம்.

நீங்களும் ஓவியரே!

கிரிஜா, ஓவியர், சென்னை.

வண்ணம் தீட்டாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். ஓவியத் திறமையும், கற்பனையும் குழந்தைகளிடம் அதிகமாகி இருக்கின்றன. ஓவியம் என்றால் வழக்கமாக தனியாகத்தானே வரைவோம். ஒரு மாற்றத்துக்காக, குடும்பத்தோடு சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு வரைவோமா?

எண்களும், எழுத்துகளும் குடும்பத்தோடு ஓவியம் தீட்டுவதற்கு நல்ல களமாக இருக்கும். 1, 2, 3, A, B, C, அ, ஆ, இ என எழுத்துகளை வைத்து ஓவியம் வரையலாம். ‘1’ என்ற எண்ணில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு வரைய வேண்டும். அடுத்து ‘A’ என்ற எழுத்தில் ஒவ்வொருவரும் ஓர் ஓவியத்தைத் தீட்ட வேண்டும்.

ஒரே ஓர் எழுத்துதான். ஆனால், ஒவ்வொருவரின் கற்பனைக்கு ஏற்ப வெவ்வேறு விதமான ஓவியங்களாக உருவாகும். இப்படி பல்வேறு எண்கள், எழுத்துகளை வைத்து ஒவ் வொருவரும் நூற் றுக்கணக்கான ஓவியங்களை உரு வாக்கலாம். உங் கள் கற்பனையைத் தட்டிவிடுங்கள், விதவிதமான ஓவி யங்களை உரு வாக்குங்கள்!

மண்டலா ஓவியம்

பர்வதவர்த்தினி ஈஸ்வரன், ஓவியர், சென்னை.

‘மண்டலா’ என்றால் வட்டம். ஒரு புள்ளியை மையமாக வைத்து, வட்ட வடிவில் குறியீடுகள், உருவங்களை உருவாக்குவதுதான் மண்டலா ஓவியம். எல்லோரையும் கொள்ளை கொள்ளும் இந்த ஓவியத்துக்கு அதிக நேரமும், பொறுமையும் தேவை. ஆனால், ஒருமுறை வரைய ஆரம்பித்துவிட்டால், ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாது. இதை மட்டும் குழந்தைகள் வரைய ஆரம்பித்தால் மணிக்கணக்கில் அவர்களுக்கு வேறு எதுவுமே தேவைப்படாது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ஓவியங்களை உருவாக்கிவிடலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தேவையான பொருட்கள்: வெள்ளைத் தாள், பென்சில், ஸ்கேல், காம்பஸ், ரப்பர், கறுப்பு மை பேனா.

தாளின் மையத்தில் ஒரு புள்ளி வையுங்கள்.

புள்ளியில் காம்பஸை வைத்து, வட்டம் வரையுங்கள்.

காம்பஸ் அளவைக் குறைத்து, அடுத்தடுத்த வட்டங்களை உருவாக்குங்கள்.

அருகே தரப்பட்டுள்ள வடிவங்களை இரு வட்டங் களுக்கு இடையே பென்சிலால் வரையுங்கள்.

பென்சில் கோடுகள் மீது கறுப்பு மை பேனாவால் வரைந்து முடித்தால், மண்டலா ஓவியம் தயார்!

குழந்தைகள் சமையல்

சுதா செல்வக்குமார், கைவினைக் கலைஞர், சென்னை.

சமையல் செய்ய வேண்டும் என்று விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. ஆனால், குழந்தைகள் என்பதால் சமையலறைக்குள் அவர்களை பெரும்பாலும் நாம் அனுமதிப்பது இல்லை. சிறிய வயதிலேயே சமையலையும் ஒரு கலையாகக் கற்றுக்கொண்டால், பிற்காலத்தில் அவர்களது வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். அத்துடன் சமையல் என்பது பெண் வேலை என்ற பாகுபாட்டையும் தகர்க்கலாம். இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைகளை சமையல் செய்வதற்குப் பழக்கப்படுத்துவோமா?

சமையல் என்றவுடன் அடுப்பு அருகில் குழந்தைகளை விட லாமா என்று பதறாதீர்கள். நாம் கற்றுக்கொடுக்கப் போவது ‘அடுப்பு இல்லா சமையல்’. குழந்தைகள் தாங்களாகவே ஓர் உணவைச் செய்து சுவைப்பதும், பிறருக்கு கொடுப்பதும் மிகுந்த மனநிறைவை அவர்களுக்கு அளிக்கும். மிக்ஸி, தேங்காய்த் துருவலுக்குப் பெரியவர்கள் உதவ வேண்டும்.

1.பொட்டுக்கடலை அவல் லட்டு

என்னென்ன தேவை?

பொட்டுக்கடலை - 1 கப்

ஊறிய அவல் - 1/4 கப்

தேன் - லட்டு பிடிக்கத் தேவையான அளவு

ஏலக்காய்த் தூள் - சிறிது

தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்

உடைத்த முந்திரி - 2 ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பொட்டுக்கடலை, ஊறிய அவலை தனித்தனியாக மிக்ஸியில் அரைக்கவும். பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவுகளை சேர்க்கவும்.

ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல், முந்திரியைச் சேர்க்கவும்.

தேனை ஊற்றி, உருண்டைகளாக உருட்டவும். சுவையான, சத்தான லட்டு தயார்.

2.தக்காளி ஜூஸ்

என்னென்ன தேவை?

பழுத்த தக்காளி - 2

புதினா இலை - 3

தேன் - 1 ஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

இஞ்சிச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

தக்காளியை நறுக்கி, புதினா இலைகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

ஜூஸை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, உப்பு, தேன், இஞ்சிச் சாறு கலக்கவும். வெயிலுக்கு இதமான, ஆரோக்கியமான ஜூஸ் தயார்.

அமைதி, ஆரோக்கியம்

முனைவர் செல்வலஷ்மி, உதவி பேராசிரியர், யோகா துறை, தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகம்.

ஆரோக்கியம் என்பது உடல் நலம், மனநலம், சமூக நலம், உணர்ச்சி நலம் ஆகியவற்றை உள்ளடக்கியதே. காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் அமைதியாக குழந்தைகளை அமரச் சொல்லுங்கள். குழந்தை கள் என்பதால் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. கண்களை மூடி, சாதாரணமாக காற்றை மெதுவாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியே விடச் சொல்லுங்கள். இப்படி 10 முதல் 20 நிமிடங்கள் செய்தால் குழந்தைகளின் மனம் அமைதியாகும். புத்துணர்வும் கிடைக்கும்.

தொலைக்காட்சியையும், போனையும் பார்க்கும் கண் களை அடிக்கடி மூடி சிறிது நேரம் உட்காரச் சொல்லுங்கள். பிறகு கண்களை மேலும், கீழும், பக்கவாட்டிலுமாக அசைத்து, பயிற்சி கொடுக்கச் சொல்லுங்கள். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

உணவு, நீர், காற்றுக்கு அடுத்த இடத்தில் குழந்தை யின் ஆரோக்கியத்தில் யோகக் கலைக்கு முக்கியப் பங்கு உள்ளது. உடல், உள்ளம் இரண்டையும் ஆரோக்கிய மாக வைத்துக்கொள்ள யோகா உதவும். அடிப்படையான யோகக் கலைகளை பல பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். அவற்றுடன் சூரிய நமஸ்காரம், தாடாசனம், பத்மாசனம், உட்கட்டாசனம் போன்றவற்றை புத்தகம், இணையத்தில் பார்த்து குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

ஜாலியான விளையாட்டுகள்

முனைவர் என்.மாதவன், செயல்பாட்டாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அட்லஸ் விளையாட்டு விளையாட ஒரு அட்லஸ், பென்சில், கடிகாரம் தேவை. அட்லஸில் ஒவ்வொரு கண்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும், கண்டத்தில் உள்ள ஏதாவது ஒரு நகர் அல்லது பகுதியை ஒருவர் கூற வேண்டும். அடுத்தவர் அந்த இடத்தைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோல சுமார் 10 இடங்களை ஒவ்வொருவரும் கண்டறிய வேண்டும். குறைவான நேரம் எடுத்துக்கொண்டவரே வெற்றியாளர்.

அடுத்து மொழி விளையாட்டு. ஒரு காகிதத்தில் 10X10 என 100 கட்டங்களை வரையுங்கள். முதலாமவர் ஏதாவது ஒரு வார்த்தையை நினைத்து, அதற்கேற்ப ஓர் எழுத்தை ஒரு கட்டத்தில் எழுதிவிட்டு, இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என குறிப்பு தரவேண்டும். அதன் அடிப்படையில், அடுத்த நபர் அடுத்த எழுத்தை எழுத வேண்றடும். வார்த்தையை முழுமையாக்குபவரே வெற்றியாளர். அடுத்தவர் விளையாட்டைத் தொடர வேண்டும். ஒவ்வொருவருக்கும் 5 வாய்ப்புகள் என்ற வகையில் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை முடிக்க வேண்டும். இதையே ஆங்கிலத்திலும் விளையாடலாம்.

இரவு வான்

பேராசிரியர் மோகனா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

விண்மீன்களை அறியவும், கதை பேசவும் கருவியோ, தொலைநோக்கியோ தேவையில்லை. நம் கண்கள் போதும். மாலையில் சூரியன் மறைந்ததும், மேற்குவானில் பளிச்சென அகல் விளக்குபோல தெரிவது சூரிய மண்டலத் தின் 2-வது கோளான வெள்ளி. இதை இன்னும் 2 மாதங்கள் வரை பார்க்கலாம். இரவு 9 மணி வரை தெரியும். இதுபோல சுமார் 300 விண்மீன்களை வெறும் கண்ணாலேயே காணலாம். இருட்டியதும் தென்கிழக்கில் பாருங்கள். முதலில் பளிச்சென்று தெரியும் விண்மீன் சிரியஸ் (ருத்ரன்). இதுதான் கண்ணால் பார்க்கும் பிரகாசமான 20 விண்மீன்களில் அதிகப் பிரகாசமானது. இது பூமியில் இருந்து சுமார் 8.25 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

இன்னும் 4 நாட்களுக்கு நிலா தெரியாது. அதனால், எளிதாக விண்மீன்களைப் பார்க்கலாம். அப்படியே கண்ணை மேல் நோக்கி நகர்த்துங்கள். அழகாகக் கையைக் காலை விரித்தபடியே ஒரு விண்மீன் கூட்டம் தெரியும். அதுதான் ஒரையான் (Orion) என்ற ‘வேட்டைக்காரன் விண்மீன் படலம்’. இதன்மூலம் பல விண்மீன் தொகுதிகளை இனம்காணலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வானை உற்று நோக்குங்கள். ஒவ்வொரு நாளும் வித்தியாசம் தெரியும். விண்மீன்கள் இடப்பெயர்வை ஒரு தாளில் தேதிவாரியாக குறித்துக்கொள்ளுங்கள். ஒரு மாதத்துக்குப் பிறகு பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x