

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது எனவும், சாதாரண உடல் பிரச்சினைக்களுக்காக மருத்துவமனைக்கு வருவதை தவிருங்கள் என்றும் ஆட்சியர் அருண் தெரிவித்தார். வதந்தி பரப்பினால் உடனடியாக கடும் நடவடிக்கை என எஸ்எஸ்பி ராகுல் அல்வால் எச்சரித்தார்.
புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 22) மாலை செய்தியாளர்களிடம் ஆட்சியர் அருண் கூறியதாவது:
"கரோனா விழிப்புணர்வுக்காக புதுச்சேரியில் பல நடவடிக்கை எடுத்துள்ளோம். 15 வயதுக்கு உட்பட்டோரும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் வீட்டிலிருந்து வெளியில் வருவதை முற்றிலும் தவிருங்கள்.
அரசு மருத்துவமனைகளுக்கு சிறு உபாதைகளுக்காக வராதீர். அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், இயங்காது.
வெளிமாநிலங்களிலிருந்து பொருட்கள் வர தடை விதிக்கவில்லை. வாகன போக்குவரத்தை நிறுத்துகிறோம்.
மளிகை பொருட்கள் கிடைக்கும். அச்சப்படத் தேவையில்லை" என தெரிவித்தார்.
எஸ்எஸ்பி ராகுல் அல்வால் கூறுகையில், "சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஒன்று கூட வேண்டாம். வெளியில் வந்தாலும் ஒருவருடன் ஒரு மீட்டர் இடைவெளியில் இருந்தால் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். தேவையில்லாமல் வீட்டிலிரு்து வெளியே வராதீர்கள்" என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "மொத்தம் 1,022 பேர் கரோனா சந்தேகம் என்று வந்தனர். அதில் 45 பேருக்கு அதுபோன்ற அறிகுறி இருந்ததால் அதை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒருவருக்கு மட்டும் உறுதியானது. மாஹே, ஏனாமை சேர்ந்த இருவருக்கான ஆய்வு முடிவுகள் வரவில்லை. மீதமுள்ள 43 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது" என்று தெரிவித்தனர்.