Published : 22 Mar 2020 06:57 PM
Last Updated : 22 Mar 2020 06:57 PM

கரோனாவால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?- நாளை முடிவு

கரோனாவால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரையும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுபற்றி அரசு, அறிவிப்பு ஏதும் செய்யவில்லை. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் எம்.பி.க்களும் பொருந்தும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

ராஜ்யசபா எம்.பி. டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மார்ச் 23 முதல் முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டாம். அதற்கு பதிலாக தங்கள் சொந்தத் தொகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாளை (மார்ச் 23) நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது கூட்டத் தொடரை ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x