

கரோனா வைரஸை தடுக்கச் சேவை புரிபவர்களுக்குக் கைதட்டி திரையுலக பிரபலங்கள் பாராட்டு மழை பொழிந்தனர். இது தொடர்பான வீடியோக்களை தங்களுடைய ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி அச்சுறுத்தி வருகிறது. பாதிப்பும், பலியும் கடந்த வாரத்தில் குறைந்திருந்த நிலையில் இந்த வாரத்தில் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பான வேண்டுகோள் விடுக்கும் உரையில், "கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக மருத்துவமனை, விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான மக்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.
வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு நாம் அனைவரும் வீட்டின் முற்றத்தில், பால்கனியில் நின்று கொண்டு கை தட்டி, 5 நிமிடம் மணியோசை எழுப்பி மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மரியாதை செலுத்துவோம்" என்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதன்படி, இன்று (மார்ச் 22) மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பலருமே வீட்டு வாசல் மற்றும் பால்கனியில் நின்றுகொண்டு கைதட்டியதைக் காண முடிந்தது. மேலும், இதைப் பலரும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சில முக்கியமான பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இதோ: