அமெரிக்க துணை அதிபர், மனைவிக்கு கரோனா இல்லை: வெள்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்க துணை அதிபர், மனைவிக்கு கரோனா இல்லை: வெள்ளை மாளிகை அறிவிப்பு
Updated on
1 min read

அமெரிக்க துணை அதிபர் மற்றும் அவரின் மனைவிக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐத் தாண்டியுள்ளது. 24,200 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரின் மனைவிக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் சோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய துணை அதிபர் பென்ஸின் செய்தித் தொடர்பாளர் கேத்தி மில்லர், ''சோதனை முடிவுகள் வெளியாகிவிட்டன. துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் அவரின் மனைவி கேரன் பென்ஸுக்கும் தொற்று இல்லை என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.

துணை அதிபர் பென்ஸ், அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முன்னதாக, அமெரிக்க அதிபருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in