

புதுச்சேரியில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட சுபநிகழ்வுகள் இன்று சுய ஊரடங்கு காரணமாக எளிமையாக நடைபெற்றன.
சுபநிகழ்வுகள் என்றாலே உறவினர்கள், நண்பர்கள் கூடி இரு வீட்டாரும் கலந்து மகிழ்வுடன் கொண்டாடுவதே தமிழர்கள் வழக்கம். ஆனால், கரோனா வைரஸ் அதை புரட்டிப் போட்டுவிட்டது.
வழக்கமாக, பன்னீர் தெளித்து நகைகள் அணிந்து 'மேக்கப்' உடன் புன்னகையுடன் சுபநிகழ்வுகளில் பலரும் வருவது வழக்கம். ஆனால், புதுச்சேரியில் இன்று (மார்ச் 22) நடைபெற்ற சுபநிகழ்வுகளில் வந்திருந்த உறவினர்களுக்கு முகக்கவசம் தரப்பட்டு, கிருமி நாசினி கையில் தெளிக்கப்பட்டது. மேலும், அதிகமான உறவினர்கள் சுப நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. அதனால் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே இந்நிகழ்வுகளில் இருந்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் முகக்கவசத்தைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை அணிவித்து கிருமிநாசினியை கையில் தெளித்து நிகழ்வில் பங்கேற்றனர். குறைந்த நேரத்திலேயே நிகழ்வுகளை நிறைவு செய்தனர்.
காலியாக இருந்த திருமண மண்டப இருக்கைகளில் தனித்து அமர்ந்திருந்த மதன்-சுகன்யா தரப்பில் கேட்டதற்கு, "இரண்டு மாதங்களுக்கு முன்பே மண்டபம் தேர்வு செய்து உறவினர்களுக்கு தெரிவித்தோம். தற்போது கட்டுப்பாடு அதிகம் இருந்ததால் குறைவானோர் பங்கேற்க அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் அரை மணி நேரத்தில் இரு தரப்பிலும் பெற்றோர், நெருங்கியோருடன் நிச்சயம் நிறைவடைந்து விட்டது. இப்போது காலியான இருக்கையில் இருவரும் அமர்ந்துள்ளோம்" என்றனர். ’
இதேபோல், முன்பே பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே மண்டபங்களில் அனுமதியுண்டு. புதிய நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் மண்டப உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போதைய கட்டுப்பாடுகளால் பலரும் சுபநிகழ்வுகளை ஒத்திவைக்கவும் தொடங்கியுள்ளனர்.